articles

img

மரண ஓலம் மத்திய ஆட்சியாளர் காதுகளை எட்டவில்லை.....

இந்தியா கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்கீழ், நாடு முழுதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமலும், உயிர்காக்கும் மருந்துகள் கிடைக்காமலும், ஒவ்வொரு மருத்துவமனையாகச் சென்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டோர் மற்றும் அதன் விளைவாக இறந்தோர் எண்ணிக்கை முன்பிருந்ததைவிட பல மடங்காக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. “எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள், எங்களுக்கு அத்தியாவசிய மருந்துகளைத் தாருங்கள்,” என்று நோயாளிகளிடமிருந்தும், அவர்களின் உறவினர்களிடமிருந்தும், மருத்துவமனைகளிடமிருந்தும் கூக்குரல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆயினும் இக்கூக்குரல்கள் மத்திய ஆட்சியாளர்களின் காதுகளை எட்டவில்லை.

தில்லியில் நடப்பது என்ன?

இரண்டாவது அலையின் காரணமாக, தலைநகர் தில்லியின் நெருக்கடி மிகவும் மோசமாக இருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் கடைசி பத்து தேதிகளில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ‘பாசிடிவ்’ என அறிவிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார்30 சதவீதமாகும். அதாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் இறப்போர் எண்ணிக்கை,அநேகமாக அனைத்து நாட்களிலும் 300ஐத் தாண்டி இருக்கிறது. ஒட்டுமொத் தத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணித்திருக்கிறார்கள். 

அதே சமயத்தில், கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வருபவர்களைப் பரிசோதித்திடப் போதுமான அளவிற்குவசதிகள் இன்றி தில்லி மருத்துவமனைகள் திணறுகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், தவிர்க்கப்படக் கூடிய மரணங்களைக்கூட தவிர்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாககங்காராம் மருத்துவமனையிலும், ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகஉயிரிழக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்றே வரக் கூடிய உடல்களை எரிப்பதற்கு முடியாமல் சுடுகாடுகள் அனைத்தும் திணறுகின்றன. இதனால் பிணங்களுடன் வரும்அதன் உறவினர்கள் 20 மணி நேரத்திற்கும்மேலாகக் காத்துக்கொண்டிருக்க வேண் டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. 

தில்லி மாநில அரசாங்கம் நிலைமையைச் சமாளிப்பதற்காக மே 3 வரை ஊரடங்கு பிறப்பித்தது.தில்லியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு தில்லி மாநில ஆம் ஆத்மி அரசாங்கமோ, அல்லது அதன் அதிகாரத்தில் பெரும்பகுதியை புதிய சட்டம் ஒன்றின் மூலம் பறித்துக் கொண்டுள்ள மத்திய அரசாங்கமோ பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலைமைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, தில்லி அரசாங்கம் குறைந்தபட்சம் நான்கு விஷயங்களைச் செய்தாக வேண்டும். அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜன்இருப்பைப் போர்க்கால அடிப்படையில் பூர்த்தி செய்திட வேண்டும். இரண்டாவதாக, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பொருத்திய படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளுடன் படுக்கைகள் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றால்மிகவும் ஆபத்தான நிலையில் வரும்நோயாளிகள் குறித்து கவனம் செலுத் தப்பட முடியும். மூன்றாவதாக, பரிசோதனை செய்திடும் வசதிகள் இலகுவாக்கப்பட வேண்டும். நான்காவதாக, தில்லி அரசாங்கம் சுயேச்சையாகவே தடுப்பூசிகள் தயாரித்து அளித்திடும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, தடுப்பூசிகளை வாங்கி, 18-45 வயதிற்கிடையே உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் போட வேண்டும்.

தில்லி அரசாங்கம், கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரொக்க மாற்று அளிக்கும்திட்டத்தைத் துவங்கியது. இதனை முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்திட வேண்டும். ஏனெனில் ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் சில மருந்துகள் பற்றாக்குறை காரணமாக இதனைப்பயன் படுத்தி கள்ளச்சந்தை பேர்வழிகள் உருவாகாமல், அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

தில்லியிலிருந்து ராஜீவ் குன்வார் மற்றும் பி.வி.அனியன்.... 

                                    ***************

பதற்றத்தில் பஞ்சாப்

பஞ்சாப்பிலும் சமீப காலங்களில் கோவிட்-19 கொரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைகடுமையாக உயர்ந்திருக்கிறது. எஸ்ஏஎஸ் நகர்,லூதியானா, பதிந்தா, பட்டியாலா, ஜலந்தர்மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பட்டியாலாவிலும், அமிர்சரசிலும் உள்ள இரு மருத்துவமனைகளில் ஆக்சிஜன்இல்லாததால் 30 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். முதலமைச்சர், நாளொன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போது தேவை என்றும்இது வரவிருக்கும் காலங்களில் 300 மெட்ரிக் டன் அளவிற்கு உயரும் என்றும் எனவே மத்தியஅரசு அதற்கேற்றவிதத்தில் ஆக்சிஜன் அனுப்பிவைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்.  தற்போது மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம்பேர் கடுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் களைப் பாதுகாத்திடக் கூடிய விதத்தில் போதுமான அளவிற்கு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லையென்றால் மாநிலத்தின் நிலைமை மிக விரைவில் மிக மோசமாகிவிடும்.

பஞ்சாப்பிலிருந்து ஆர்.எல். மவுட்கில்...

                                    ***************

இவர்களின் பிரச்சனை கொரோனா அல்ல...

நாட்டின் இதர மாநிலங்களைப்போலவே, ஹரியானாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆறு மாவட்டங்களில் பாதிப்புக்கு உள்ளாகி ‘பாசிடிவ்’ என அறிவிக்கப்பட்டவர்கள் 4,35,823 பேர். இம்மாநிலத்தில் குருகிராம், பரிதாபாத், ஹிசார்,சோனிபட், கர்னால், பஞ்ச்குலா ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசுத்தரப்பில் அளிக்கப் பட்டுள்ள விபரங்களே நம்மை அச்சுறுத்தக்கூடிய நிலையில் உள்ளபோதிலும், உண்மையில் நிலைமை மிகவும் மோசமாகும்.

மாநிலத்தில் கோவிட்-19 தொடர்பான பரிசோதனை மிகவும் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதால், உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியே தெரியவில்லை. ரோதக் நகரில் உள்ள முதுநிலை மருத்துவ அறிவியல் இன்ஸ்டிட்யூட்டின் மருத்துவக் கண்காணிப்பாளர், “இங்கே பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அமைச்சப்பணி ஊழியர்கள் ஆகியவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19ஆல் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்,” என்று கூறியிருப்பதிலிருந்து இங்குள்ள மோசமான நிலைமையைப் புரிந்துகொள்ள முடியும்.மாநிலத்தில் ஹிசார், ரெவாரி, குருகிராம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் இறந்துள்ள தகவல்களும் வந்திருக்கின்றன. சென்ற ஆண்டு கோவிட்-19 முதல் அலை வந்தபின்னர், மாநிலத்தில் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்திட, பாஜக மாநில அரசு எதுவுமே செய்திடவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்தது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், சுகாதார  ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக, அங்கே பணியாற்றிவந்த ஒப்பந்த ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது.இப்போதும்கூட பல மருத்துவமனைகளில் ஊழியர்கள் ஊதியஉயர்வு கோரி பல மாதங்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஓராண்டில் இம்மாநிலத்தில் புதிதாக ஒரு மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. பாஜக மாநிலஅரசின் முன்னுரிமை என்பது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீரஞ்செறிந்த முறையில் நடைபெற்று வரும் அனைத்துவிவசாயிகளின் கூட்டமைப்புப் போராட்டத்தை எப்படி மதிப்பிழக்கச் செய்யலாம் என்பதேயாகும்.

ஹரியானாவிலிருந்து வீரேந்திரசிங் மாலிக்...

பீப்பிள்ஸ் டெமாக்ரசி (2.5.2021)

தொகுப்பு: ச.வீரமணி

 

;